வங்கதேசத்தின் தற்காலிகத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாகிர் சம்சாத் மிர்சாவுக்கு அளித்த பரிசில் ஒரு சர்ச்சைக்குரிய வரைபடம் இடம்பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அதனுடன் இணைந்த மற்ற பகுதிகள் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகக் தவறாகக் காட்டப்பட்டிருந்தன. வங்கதேசம்-பாகிஸ்தான் இடையே உறவை மேம்படுத்தும் நோக்குடன் நடந்த சந்திப்பில், இந்தியாவின் நிலப்பரப்பை அபகரிப்பது போலக் காட்டப்பட்ட இந்தச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் யூனுஸ் செயல்படுவது இது முதல் முறையல்ல. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் “நிலத்தால் சூழப்பட்டவை” (Landlocked) என்றும், வங்கதேசம் மட்டுமே “கடலின் பாதுகாவலர்” என்றும் அவர் பலமுறை வெளிநாடுகளில் பேசி வந்துள்ளார். இந்த வரைபடச் சர்ச்சை, யூனுஸின் எண்ணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களால், இந்தியா ஏற்கனவே வங்கதேசத்துடனான ஒரு முக்கியமான போக்குவரத்து ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
