2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் நெருங்கும் நிலையில், இந்தியாவிற்கு வந்து விளையாட மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) முடிவிற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய இந்த மோதல், தற்போது உலகக்கோப்பைப் புறக்கணிப்பு வரை சென்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிபி-யின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி, “வங்கதேசம் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது; ஐசிசி என்பது இந்தியாவிற்கான அமைப்பு மட்டுமல்ல, அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்பதை உணர வேண்டிய தருணம் இது” என்று சாடியுள்ளார்.
மேலும், பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியின் முடிவுகளைத் தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், பாகிஸ்தானைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் குரல் எழுப்பினால் மட்டுமே ஐசிசி இந்தியாவின் செல்வாக்கிலிருந்து வெளியே வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்று ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுத்துள்ள நிலையில், பாகிஸ்தானும் இத்தொடரில் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற தகவல்கள் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
