இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் கால்நடைகளுக்கு கிர்கிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்புகளே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடியது என்பதாலும், இதற்கு தற்போது வரை முறையான தடுப்பூசிகள் இல்லாததாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான கால்நடை வர்த்தகத்தை கிர்கிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இறைச்சி மட்டுமன்றி மாடு, ஆடு, கோழி மற்றும் பன்றிகள் போன்ற உயிருள்ள கால்நடைகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அந்நாட்டின் உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தலைநகர் பிஷ்கேக் மற்றும் ஓஷ் நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ள போதிலும், பொது சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிர்கிஸ்தான் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.