பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு சட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது. அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த மேஜர் மோஹித் சர்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, படத்தைத் தற்காலிகமாக நிறுத்துமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த உளவு-திரில்லர் படத்தில் ரன்வீர் சிங்குடன் ]மாதவன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய சினிமாவின் மிகுந்த வன்முறை காட்சிகள் கொண்ட படங்களில் ஒன்றாக இது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் மேஜர் மோஹித் சர்மாவின் பெற்றோர், “திரைப்படம் எங்கள் அனுமதி இல்லாமலும் இந்திய இராணுவத்தின் அனுமதி இல்லாமலும், எங்கள் மகனின் ரகசிய நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவரின் தியாகத்தையும், ராணுவ மரபையும் காக்கும் நோக்கில் பட வெளியீட்டைத் தடை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பட இயக்குநர் ஆதித்யா தாரி,
“படம் மேஜர் மோஹித் சர்மாவின் வாழ்க்கையை நேரடியாக அடிப்படையாகக் கொண்டது அல்ல”
என்று விளக்கம் அளித்துள்ளார். ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பிற்குள் ஊடுருவும் ஒரு இந்திய அதிகாரியாக உருவாகியுள்ளது. இது மேஜர் மோஹித் சர்மா மேற்கொண்ட உண்மைச்சம்பவத்துடன் ஒத்ததாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1978 ஜனவரி 13 அன்று ஹரியானா ரோஹ்தக்கில் பிறந்த மோஹித் சர்மா,
சிறு வயது முதல் ராணுவத்தில் சேரும் ஆவலுடன் வளர்ந்தார். 1995 இல் NDA மற்றும் IMA-யில் சேர்ந்து பயிற்சி பெற்ற அவர், 1999 இல் 5வது மெட்ராஸ் ரெஜிமென்டில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் ராஷ்ட்ரிய ரைபிள்ஸில் பணியாற்றிய அவர், சிறப்புப் படை (Special Forces) பிரிவில் இணைந்து, 1 பரா (SF) பட்டாலியனின் முக்கிய கமாண்டோவாக உயர்ந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிற்குள், “இப்திகார் பட்” என்ற போலி அடையாளத்தில் ஊடுருவி, இரு முக்கிய பயங்கரவாதிகளான அபு டோராரா, அபு சப்சார்
ஆகியோரை கொன்ற பத்மவீரச் செயலுக்காக அவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். இந்த நடவடிக்கைக்காக அவர் நீண்ட முடி, அடர்த்தியான தாடி வளர்த்தும், தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியும் பணியாற்றினார்.
கடந்த 2009 இல் ஜம்மு–காஷ்மீரில் நடந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த மேஜர் மோஹித் சர்மாவுக்கு, அமைதிக்கால வீரத்திற்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா மரணத்திற்கு பின் வழங்கப்பட்டது. மேலும் இவரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு ரன்வீர் சிங் திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது படத்திற்கு புதிய சிக்கலாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மேஜர் மோகித் சர்மா பற்றியும் தற்போது இணையத்தில் பலரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
