2025 ஆசியக் கோப்பை செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் இரு அணிகளுக்கிடையேயான லீக் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதேசமயம், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், “இந்தியா எங்களுடன் விளையாடாமல் விலகினால் தான் பாகிஸ்தானின் கௌரவம் காப்பாற்றப்படும். இல்லையெனில், அவர்கள் நம்மை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக அடித்து விடுவார்கள்” என்று கூறி, தனது அணியையே அவமதித்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், மேற்கிந்திய தீவுகள் 2-1 என வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் பாகிஸ்தான் 295 ரன்கள் இலக்கை எதிர்கொண்டபோதும், வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, பாசித் அலி, “நாம் இந்தியாவிடம் தோற்றால், பாகிஸ்தான் மக்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும் . ஆனால் ஆப்கானிஸ்தானிடம் தோற்றால், யாரும் கவலைப்பட மாட்டார்கள்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய தோல்வி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், 2025 ஆசியக் கோப்பையில் அவர்களின் ஆட்டத் திறமை எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என டிராவில் முடித்த இந்திய அணி, வலுவான அணியாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இந்த ஆசியக் கோப்பை லீக் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சுவாரஸ்யத்தைக் கொடுக்க உள்ளது.
