ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆம்பர் கோட்டைக்குச் சென்ற சார்லி எவன்ஸ் எனும் அமெரிக்கப் பயணி, இந்தியர்கள் சோம்பேறிகள் என்றும் உடற்தகுதி இல்லாதவர்கள் என்றும் விமர்சித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் செங்குத்தான பாதையில் ஏறிக்கொண்டிருந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பலர் பாதியிலேயே அமர்ந்து ஓய்வெடுப்பதையும், புகைபிடிப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்தியர்களுக்கு இலக்கை நோக்கிச் செல்லும் ஆர்வம் இல்லை எனப் பொதுப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 4.36 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் நிலையில், இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்து அவர் முன்வைத்த விமர்சனம் பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது.

​இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் இந்தியர்கள் உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்துவதில்லை என அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலானோர் அவரது கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர். “கோட்டையின் உச்சியில் ஒரு கோயில் இருப்பதாகச் சொன்னால், இந்தியர்கள் ஓடிப் போய் ஏறுவார்கள்; இது சோம்பேறித்தனம் அல்ல, சரியான உந்துதல் இல்லாததே காரணம்” என நகைச்சுவையாகவும் சிலர் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், “ஒரு சிலரைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியர்களையும் பொதுப்படையாக விமர்சிக்க வேண்டாம்” என்றும், வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து அதன் அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் காட்டமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.