ரயில் பெட்டியின் உள்ளே பயணிகள் சிலர் மத வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி, பொது இடங்களில் தனிநபர் சுதந்திரம் மற்றும் பொது ஒழுக்கம் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயிலின் ஒரு பகுதி தற்காலிகக் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. ரயிலின் மேல் படுக்கை பூக்களாலும், தெய்வங்களின் படங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஒரு சிறு சன்னதி போலக் காட்சியளிக்கிறது. அங்குள்ள பயணிகள் பக்திப் பாடல்களைப் பாடி, ‘ஆரத்தி’ எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
இந்த வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகள் மத்தியில் கடும் விவாதப் பொருளானது. பொதுப் போக்குவரத்தில் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படலாமா? இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்காதா? பாதுகாப்பு விதிகள் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி ரயில்வே அமைச்சகத்தை சிலர் சாடினர். ரயிலில் தொழுகை நடத்தினால் தவறு எனச் சொல்பவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? எனச் சிலர் மதச்சார்பின்மை குறித்துக் கேள்வி எழுப்பினர்.
மறுபுறம், இது ஒரு சாதாரண ரயில் அல்ல, ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ ரயில் என்று சிலர் விளக்கம் அளித்தனர். இந்த ரயில்கள் புனித யாத்திரை செல்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை என்பதால், அங்கு இத்தகைய வழிபாடுகள் செய்வது இயல்பானது என்றும், இதற்கு ரயில்வே நிர்வாகத்தின் ஆதரவு உண்டு என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இது தொடர்பாகப் பதிவிட்ட ஒரு பயனர், “நான் ஒரு இந்து, ஆனால் அதற்கு முன் இந்தியன். பொது இடத்தில் இதுபோன்ற செயல்கள் மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “பொது இடங்களில் இத்தகைய செயல்களை எப்படி அனுமதிக்கிறார்கள்? விதிகள் அனைவருக்கும் பொதுவானவை இல்லையா?” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
यह पूर्णतः गलत है।
किसी भी यात्री ट्रेन में (तीर्थ यात्रा स्पेशल ट्रेन या पूरा कोच बुकिंग को छोड़कर) इस प्रकार पूजा-अर्चना करना उचित नहीं है।
यात्रा एक साझा स्थान होती है, जहाँ हर यात्री अपनी सुविधा और शांति के साथ सफर करना चाहता है। इस तरह की गतिविधियाँ अन्य यात्रियों के लिए… pic.twitter.com/FckEphRQF8
— NCIB Headquarters (@NCIBHQ) April 12, 2026
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, தேசிய குற்றப்புலனாய்வுப் பணியகம் (NCIB) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது. அதில், பயணிகள் பொது இடங்களின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பயணத்தின் போது ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
