திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது,

முன்னதாக கடலில் பேனா சிலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. தற்போது இதற்கு சில நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ‘ISN அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமானத்திற்கு எந்த சூழ்நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்’ உட்பட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா. கடலையே மை செய்யும் தீராத பேனா. கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா. ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா. முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா. கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக’ என புகழாரம் தெரிவித்துள்ளார்.