சுற்றுலா என்றால் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதுதான் வழக்கமான ஒன்று. ஆனால், சீனாவில் தற்போது புயல், மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களைச் செயற்கையாக உருவாக்கி, அவற்றை நேரில் அனுபவிக்கும் ‘டார்க் டூரிசம்’ எனும் புதிய வகைப் பயணப் போக்கு இளைஞர்களிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. உண்மையான ஆபத்து ஏதுமின்றி, பேரிடர் காலத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிகளைக் கற்றுக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகக் கூறப்படுகிறது.

கிழக்கு சீனாவின் ஹாங்சோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு பயிற்சி மையம், இத்தகைய செயற்கைப் பேரிடர் அனுபவங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இங்கு மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் போன்ற ஆபத்தான சூழல்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் பங்கேற்பவர்களுக்குப் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு, அவசர காலத்தில் எவ்வாறு தப்பிப்பது மற்றும் மற்றவர்களை மீட்பது என்பது குறித்த பயிற்சிகளும் நிபுணர்களால் அளிக்கப்படுகின்றன.

இந்த வித்தியாசமான அனுபவத்தைப் பெறச் சாதாரண சுற்றுலாவை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு சுமார் 899 சீன யுவானும், குடும்பங்களுக்கான சிறப்புப் பயிற்சிகளுக்கு 5,000 யுவான் வரையிலும் கட்டணமாகப் பெறப்படுகிறது. இதில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு உருவாகும் செயற்கைச் சூழல், உண்மையான பேரிடரில் சிக்கியது போன்ற அச்சத்தையும் பதற்றத்தையும் தருவதாகப் பங்கேற்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்திற்கு இதுவரை 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலானதால், வழக்கமான சுற்றுலாவைத் தாண்டி புதிய அனுபவங்களைத் தேடும் இளைஞர்கள் மத்தியில் இதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவசர காலத்தில் பதற்றமின்றி குழுவாகச் செயல்படவும், தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும் இது உதவுவதாக இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளையில், மனித உயிர்களையும் வீடுகளையும் பலிவாங்கும் இயற்கைப் பேரிடரைப் பொழுதுபோக்காகவும் வணிகப் பொருளாகவும் மாற்றுவது தவறானது என விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர். பேரழிவுகளைப் வெறும் அனுபவமாக மட்டும் பார்க்காமல், அதிலிருந்து உயிர் காக்கும் மீட்புப் பயிற்சிகளைப் பெறுவதிலும், பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை மதிக்கக் கற்றுக்கொள்வதிலும் மட்டுமே இத்தகைய புதிய பயணப் போக்கின் உண்மைப் பயன் அடங்கியுள்ளது.