லக்னோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற மாநகராட்சி மற்றும் போலீஸ் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் கற்களை வீசி தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது துணை ஆய்வாளர் ஒருவரின் கழுத்தை நெரித்ததாகவும், இரும்புச் சங்கிலியால் தாக்க முயன்றதாகவும் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து ஒரு இரும்புச் சங்கிலியை போலீஸார் கைப்பற்றி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், கலவரம், தாக்குதல், மிரட்டல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

<

/p>

இந்த வழக்கில் இதுவரை இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அரசு நிலங்கள் மற்றும் சாலைகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அதிகாரிகள் அங்கு சென்றதாக மேற்கு லக்னோ போலீஸ் கமிஷனர் கமலேஷ் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அப்போது அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், துணை ஆய்வாளர் ஒருவரின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

அரசுப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற 9 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.