திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனைச் சக மாணவர்கள் தீயில் தூக்கி வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாதியப் பாகுபாடு காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். பள்ளி வளாகத்திலேயே ஒரு மாணவன் மீது சக மாணவர்களே இத்தகைய தாக்குதலை நடத்தியது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதில் சாதியப் பின்னணி ஏதுமில்லை என்றும், மாணவர்கள் விளையாட்டாகச் செய்த செயல் விபத்தாக முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் தீப்பிடித்ததும், அதே மாணவர்களே தீயை அணைத்து ஆசிரியர்களின் உதவியுடன் அவனை மருத்துவமனையில் சேர்த்ததோடு, தங்களது செயலுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். ஒருபுறம் இது விளையாட்டு விபத்து எனச் சொல்லப்பட்டாலும், மற்றொருபுறம் இது திட்டமிட்ட தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
