பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 கால்பந்தாட்டத் தொடரின் தொடக்க ஆட்டத்தில், கிரிக்கெட் பந்து திடீரென நிறம் மாறிய வினோதச் சம்பவம் வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் இடையே, வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய கிரிக்கெட் பந்து மெல்ல மெல்ல இளஞ்சிவப்பு (Pink) மற்றும் சிவப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கியது. இதைப் பார்த்த வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஒருகணம் திகைத்துப் போயினர்.
ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன், இது குறித்து உடனடியாக நடுவர்களிடம் முறையிட்டார். பந்தின் தரம் மற்றும் நிறம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இது குறித்துப் பின்னர் விளக்கமளித்த அவர், “வீரர்களின் சீருடையில் உள்ள சாயம் பந்தில் ஒட்டுவதாலேயே இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது. பந்தைப் பளபளப்பாக்க சீருடையில் தேய்ப்பது வழக்கம் தான், ஆனால் இப்படிச் சாயம் ஒட்டுவதை நான் எனது வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.
இந்த ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. இருப்பினும், தோல்வியடைந்த ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி தனது எக்ஸ் (X) தளத்தில், “இந்தத் தொடரின் முதல் ‘பிங்க் பால்’ (Pink Ball) போட்டியில் வெற்றி பெற்ற லாகூர் அணிக்கு வாழ்த்துகள்” என நக்கலாகப் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச தரம் வாய்ந்த ஒரு தொடரில், வீரர்களின் சீருடைத் தரம் இவ்வளவு மோசமாக இருப்பது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் லீக் அமைப்பாளர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் இது போன்ற குளறுபடிகள் நடக்காமல் உறுதி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
