ஐபிஎல் 2026 ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களைக் கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது அதன் விளைவை மிகக் கொடூரமாக அனுபவித்து வருகிறது. சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், கடைசி 5 ஓவர்களில் மட்டும் 97 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை அணி 250 ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
நாதன் எல்லிஸ் காயம் காரணமாக விலகிய நிலையில், டெத் ஓவர்களில் வீச சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிஎஸ்கே தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. முந்தைய காலங்களில் ஆர்சிபி அணி சந்தித்த அதே ‘பவுலிங் பலவீனம்’ தற்போது சிஎஸ்கேவை தொற்றிக்கொண்டதோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே பவுலர்கள் பின்பற்றும் ‘அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்’ (Around the stump wide yorker) என்ற உத்தியை முன்னாள் வீரர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இது குறித்துப் பேசிய அம்பத்தி ராயுடு, “இந்தத் திட்டத்தை வலைப்பயிற்சியிலேயே தோனி நிராகரித்துவிட்டார், இதை ஒருபோதும் போட்டிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அப்போதே சொன்னார்” என போட்டு உடைத்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் டுபிளெஸி ஆகியோரும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். சிஎஸ்கே நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்ற வெளிநாட்டு அணிகளிலும் இதே தோல்வியடைந்த திட்டம் பயன்படுத்தப்படுவதால், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் முடிவுகள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
