மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக மேற்கொண்டு வரும் தொகுதி மறுவரையறை பணிகள், நாட்டின் ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் செயல் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, தென் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு “ஜனநாயகப் படுகொலை” எனச் சாடியுள்ளார்.
எப்படிச் செய்யப் போகிறார்கள், என்ன மாதிரியான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்பது குறித்து எந்தவொரு வெளிப்படையான விளக்கமும் அளிக்காமல் ஒன்றிய அரசு மௌனம் காப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த ரகசியத் தன்மையானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறிய முதல்வர், மறைமுகமாக ஏதோ ஒரு பெரிய ஆபத்து காத்திருப்பதாக எச்சரித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்கும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய முன்னேறிய மாநிலங்கள் தண்டிக்கப்படுவதையும், வட மாநிலங்கள் தேவையற்ற பலன்களைப் பெறுவதையும் ஏற்க முடியாது என்பதே மாநில உரிமைகளுக்கான குரலாக எதிரொலிக்கிறது. இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கம் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.
