கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, எங்களது கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதில்லை. மாறாக ஒரு சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தினர் பணி வழங்குகின்றனர். அவர்கள் எங்களுக்கு பணி வழங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.