திமுக கட்சியின் எம்பி டிஆர் பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை. அவர்கள் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கும் மட்டும்  லட்சக்கணக்கான கோடியில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். வழக்கமாக நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது திருக்குறள் சொல்வார். ஆனால் இந்த முறை அதுவும் கிடையாது. ஏன் தமிழ்நாடு என்ற பெயர் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியது.

தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்காமல் துரோகம் செய்த மத்திய அரசு தற்போது ரயில்வே திட்டங்கள் மூலமாகவும் முதுகில் குத்தி உள்ளது. அதாவது பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. இதில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது . பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அந்த புத்தகம் அவையில் வைக்கப்படும் நிலையில் தற்போது வெளியிட்டிருப்பதன் மூலமே அவர்களின் சதி தெளிவாக தெரிகிறது. இதில் நாட்டின் 80 சதவீத மக்களை மறந்து அவர்கள் பணக்காரர்களை மட்டும் குறி வைத்து திட்டங்கள் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதயமே இல்லாமல் தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் பிச்சை போட்டு இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.