வெளிநாடுகளில் வாழ்ந்து பார்த்தபின் அமெரிக்காவின் வாழ்க்கை முறையை விமர்சித்த அடாம் என்ற இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ‘@trvlking’ என்ற கணக்கில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அடாம், கடந்த 18 மாதங்களாக வெளிநாடுகளில் வாழ்ந்த பின் தான் அமெரிக்காவில் உள்ள நகரங்களின் நடைபாதை வசதியின்மை, பொதுப் போக்குவரத்து அவல நிலை, மற்றும் மக்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சூழல் போன்றவற்றை உணரத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
View this post on Instagram
“வெளிநாடுகளில் மக்கள் வேலை மட்டும் இல்லாமல் வாழ்க்கையையே ரசிக்கிறாங்க. ஆனால் அமெரிக்கா productivity-யை மட்டும் நம்பிக்கொண்டு ஓடிகிட்டே இருக்கு” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அமெரிக்கா என்பது ஒரு மிகச் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடு. மக்கள் வசதிக்காக கட்டப்படவில்லை; மக்களிடமிருந்து பணத்தை எடுத்துக்கொள்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டு அமைப்பு மக்கள் நலனை முதன்மையாக்கும்போது தான், அது எப்படி வேறுபட்டதாக உணரப்படுகிறதென்று புரிகிறது” எனக் கூறியுள்ளார்.
“அமெரிக்காவைவிட பல நாடுகளில் வாழ்க்கை எளிதும், இனிமையும் இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், பலரும் அதைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களுடன் உரையாடத் தொடங்கினர்.
ஒருவர், “ஆம், அமெரிக்காவுக்கு வெளியே வாழ்க்கை ரொம்ப ஸ்மூத். அமெரிக்கா முழுக்க வேலை, வேலை, வேலை தான்” எனக் கூறினார். மற்றொருவர், “அமெரிக்க சாலரியுடன் வெளிநாட்டில் வசிக்க எளிது தான்” என விமர்சித்தார். அதேசமயம், ஒருவரோ “மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு வர முயல்றாங்க. அது ஒரு நல்ல நாடு இல்லன்னா இவ்வளவு பேர் வருவாங்களா?” என எதிர்வினை தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது, வாழ்க்கை தரம், பணத்தை மையமாகக் கொண்ட அரசியல் அமைப்புகள், மக்கள் நலன் குறித்த அரசு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேலான விவாதங்களை சமூக வலைதளங்களில் உருவாக்கியிருக்கிறது.
