தமிழக அரசியலில் ‘நிச்சயம் நடக்காது’ என்று கருதப்பட்ட விஷயங்கள் தற்போதைய தேர்தல் களத்தில் அரங்கேறத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வலுவான மாற்று அணியை உருவாக்க பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, அதிமுகவின் வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வேண்டுமானால், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் தரப்பினரையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் டெல்லி மேலிடம் உறுதியாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்:
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பால் அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படுவதை தவிர்க்க விரும்புவது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய கூட்டணியே ஆளுங்கட்சியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள உதவும் என்ற கணக்கு போன்றவைகள் ஆகும்.
ஆரம்பத்தில் ஓபிஎஸ் வருகையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது ‘அரசியல் யதார்த்தத்தை’ உணர்ந்து தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஓபிஎஸ் அணிக்கு 2 முதல் 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அவர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர நினைத்தால் எங்களுடன் தான் இருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார். இது ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்குள் நுழைவதற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
பாஜகவின் இந்த சமரச முயற்சியும், அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டும் மென்மையான போக்கும் 2026 தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை ஓபிஎஸ் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கப்போவதாக அவரே தெரிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரமே அதனை உற்று நோக்கி கவனித்து வருகிறது.
