மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ராலி மாவட்டத்தில் பிந்து சாகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை அங்குள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மூடப்படாமல் திறந்து வெளியில் இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த ஆழ் துறை கிணறு சுமார் 250 அடி ஆழம் இருந்தது. அதில் 25 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சுமார் 5 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமியை தீயணைப்புத் துறையினர் மீட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.