ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து பல்கொரியா நாட்டிற்குள் கண்டெய்னர் ஒன்று நுழைந்துள்ளது. இந்த கண்டெய்னர் தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பதை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டைனரை போலீசார் திறந்து பார்க்கும்போது அதில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதில் 18 பேர் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னரில் உள்ளவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை விசாரிக்க தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் ஆப்கானை சேர்ந்த அகதிகள் துருக்கியில் இருந்து பல்கொரியாவிற்கு கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.