சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறுகிறது. தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார்.

தேனீர் விருந்தில் பங்கேற்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியிடம் சிறிது நேரம் உரையாடினார். அவர் உரையாடிய போது அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி எ.வ. வேலூ ஆகியோரும் பங்கேற்றனர். அதேபோல உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஆகியோர் விருந்தில் பங்கேற்றனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக இடதுசாரிகள் விசிக, மற்றும் த.வா.க புறக்கணித்தன. அதே சமயம் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் விருந்தில் பங்கேற்கவில்லை.