கோவையில் கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் புதிய பார்சல் சேவை குறித்த அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்தியகுமார் கூறியதாவது, ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனப்படும் புதிய பார்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்திற்கு பார்சல்களை கொண்டு வரும் பணிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து உரிய இடத்திற்கு பார்சல்களை கொண்டு சேர்க்கும் பணிகளை அஞ்சல் துறை மேற்கொள்ளும்.

இடைப்பட்ட சேவையை ரயில்வே துறை மேற்கொள்கிறது. ரயில்வே மற்றும் அஞ்சல் துறையின் பரந்து விரிந்த சேவைகளின் மூலமாக இந்த புதிய பார்சல் சேவை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார். அந்த வகையில் கோவை ரயில் நிலையத்தில் கடந்த புதன் கிழமை ரயில்வே துறை மற்றும் அஞ்சல்  துறை இணைந்து தொடங்கிய ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனும் புதிய பார்சல் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக புதன்கிழமை மாலை 3 மணிக்கு கோவையிலிருந்து சென்னை சென்ற சதாப்தி ரயிலில் 480 கிலோ பார்சல்கள் அனுப்பப்பட்டது. இந்த சேவையை சேலம் ரயில்வே கூட்டத்தின் உதவி வணிக மேலாளர் பாண்டுரங்கன், அஞ்சல் துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் அகில் நாயர், அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் கோவை ரயில் நிலைய இயக்குனர்  போன்றோர் இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த சேவையின் மூலமாக இயந்திரங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன் அடைய முடிகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விதமாக கனரக பொருட்களை எளிதில் அனுப்ப முடியும். அதே போல் கோவையில் உள்ள பம்ப்செட், வால்வுகள், கிரைண்டர் மற்றும் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர் இதன் மூலமாக பெரிதும் பயனடைகின்றனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் துறையினர் மற்றும் ஈரோடு சேலம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இந்த சேவை பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.