
ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும் விடுதியில் முன்புறம் ஒரு கம்பியில் துணியை காய போட்டுள்ளார். அந்த கம்பியில் மின்சாரம் கசிந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கனிஷ்கர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு எதிர்பாராதவிதமாக கம்பியை தொட்ட தீபக் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீபக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் தீபக்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.