வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியாவையும் குறிவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், “தாய்நாட்டைப் பாதுகாக்க மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்கமாட்டேன்” என கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகப் பிடித்துச் சென்றதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “வெனிசுலா விவகாரம் முடிந்துவிட்டது, அடுத்து கொலம்பியா தான். அமெரிக்காவிற்குள் கொக்கைன் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு கொலம்பியாவே முக்கியக் காரணம். அங்கு பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது” என்று மிரட்டல் விடுத்தார்.
மேலும், கொலம்பியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது சரியான முடிவாகவே இருக்கும் என்றும் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்தார். டிரம்பின் இந்த மிரட்டலுக்குச் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கூறியதாவது: “வெனிசுலாவில் நடத்தியது போன்ற தாக்குதலைக் கொலம்பியாவில் நடத்த அமெரிக்கா முயன்றால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். நான் இனி ஒருபோதும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று உறுதி ஏற்றிருந்தேன். ஆனால், எனது தாய்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்.”
கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபரான குஸ்தாவோ பெட்ரோ, ஒரு முன்னாள் கொரில்லா போராளி என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய அவர், தற்போது அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடிப் போக்கு, லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிடுவது சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது எனப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் வெனிசுலா அதிபர் மதுரோ தற்போது அமெரிக்கக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் அமெரிக்காவின் அரசியல் வரைபடம் மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
