தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் எடுத்துள்ள அதிரடி முடிவு தலித் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மறைந்த பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தற்போது அதிமுக கூட்டணியில் வடசென்னை பகுதியில் (திரு.வி.க. நகர் தொகுதி) வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

அவருக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள பா.ரஞ்சித், அதே சமயம் திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒருபுறம் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பொற்கொடிக்கு ஆதரவு, மறுபுறம் திராவிட மாடல் கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்கு ஆதரவு என ரஞ்சித் எடுத்திருக்கும் இந்த ‘இரட்டை’ நிலைப்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“ஜனநாயகத்தைக் காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவும் திருமாவளவன் வெற்றி பெற வேண்டும்” என்று ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.

அதே சமயம், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தின் நீதிக்காகப் போராடும் பொற்கொடியின் வெற்றியும் முக்கியம் என்பது ரஞ்சித்தின் கருத்தாக உள்ளது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள், “தென்னை மரத்துல ஒரு குத்து.. ஏணி சின்னத்துல ஒரு குத்து” என்கிற பாணியில் ரஞ்சித் செயல்படுவதாகக் கிண்டலடித்து வருகின்றனர்.

எது எப்படியோ, பா.ரஞ்சித்தின் இந்த அதிரடி ஆதரவு அறிவிப்பு தேர்தல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.