ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் நடவடிக்கை, தற்போது மாணவர்களுக்கு அறிமுகமாகும் வகையில் பாடத்திட்டமாக இணைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்தியாவின் சிறந்த ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகப் பாராட்டப்படும் இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, அவர்களது பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் தைரியத்தையும், தாக்குதல்களுக்கு எதிராக நாட்டின் திடம்சொல்லும் நிலைப்பாட்டையும் மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக, இந்த நடவடிக்கையை பாடத்திட்டமாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) செயல்படுத்தி வருகிறது. இதில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடுகள் எவ்வாறு எதிர்வினை தெரிவிக்கின்றன?, தேசிய பாதுகாப்பில் ராணுவம், அமைச்சகங்கள், மற்றும் ராஜதந்திர அமைப்புகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன? என்பதுபோன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கப்பட உள்ளன. இது மாணவர்களிடையே தேசிய உணர்வும் பாதுகாப்பு விழிப்புணர்வும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய பாடத்தொகுப்பு இரண்டு நிலைகளில் வடிவமைக்கப்படுகிறது. முதல் பகுதி 3 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாவது பகுதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்ப தகுந்தபடி வடிவமைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பில் மாணவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய பாடம், வருங்கால தலைமுறைக்கு முக்கிய அறிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
