ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட போவது இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெண்களுக்கான சுதந்திரத்தை தலிபான்கள் நசுக்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மார்ச் மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்பதாக இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் மாதம் இந்த தொடரானது நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வரும் சூழலில், அண்மையில் பெண்கள் கல்வி கற்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதே நேரத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் அவர்கள் வேலை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உடை கட்டுப்பாடுகளும் கடுமையாக விதிக்கப்பட்ட சூழலில் இது போன்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக, குறிப்பாக பெண் சுதந்திரத்திற்கு எதிராக தலிபான்கள் செயல்படுவதாக கூறி இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தத் தொடரில் தாங்கள் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் போன்ற வளர்ந்து வரக்கூடிய நாடுகளில், கிரிக்கெட் வளர்ந்து வரும் நாடுகளில் அந்த நாடுகளில் மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டை மேம்படுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனைத்து உதவிகளையும் புரியும். அதே நேரத்தில் இதுபோன்ற பெண் சுதந்திரத்தை நசுக்குவது போன்ற செயல்கள் காரணமாக இது போன்ற கடினமான முடிவுகளை தாங்கள் எடுக்க வேண்டி  இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது, மேலும் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்த்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து ஈடுபடும்.” என்று தெரிவித்துள்ளது.