அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றின் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான், கடைசி பந்து வரை போராடி 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்து மீண்டும் சமன் செய்ததால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் உறைந்து போயினர்.
வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட இரண்டாவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா விஸ்வரூபம் எடுத்தது. அந்த ஓவரில் அதிரடியாக விளையாடி 23 ரன்களைக் குவிக்க, கடினமான இந்த இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா போராடிப் பெற்ற இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. தோற்றாலும் ஆப்கானிஸ்தான் காட்டிய அந்த அசாத்தியமான போராட்டம் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமைந்தது.
