தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான போலீஸ்காரர் ஒருவர், தனது கடனை அடைக்க மனைவியுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் அதிபரைத் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.
சித்திபேட்டை மாவட்ட குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த பிரவீன் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகியோர், விஸ்வநாதம் என்ற 57 வயது ரியல் எஸ்டேட் அதிபரை மே 2-ம் தேதி தங்களது காருக்குள் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
ஆன்லைன் பெட்டிங்கில் சுமார் 60 லட்சம் ரூபாயை இழந்த பிரவீன், 30 லட்சம் ரூபாய் வரை கடனில் மூழ்கியுள்ளார். இந்தக் கடனை அடைப்பதற்காகவே, விஸ்வநாதம் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடிக்க இந்தத் தம்பதி இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளனர்.
கொலை செய்த பின்னர் உடலை ஒரு கால்வாயில் வீசிவிட்டு, நகைகளை ஹைதராபாத்தில் விற்று அந்தப் பணத்தையும் மீண்டும் சூதாட்டத்திலேயே இழந்துள்ளனர்.
காணாமல் போன விஸ்வநாதனைத் தேடிய போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோதுதான் பிரவீனின் முகத்திரை விலகியது.
அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இதே தம்பதி கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மூதாட்டியைக் கடத்திச் சென்று அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளனர்.
அந்தச் சங்கிலி திருட்டுப் போனதாக அந்த மூதாட்டி புகார் அளிக்கச் சென்றபோது, திருடன் பிரவீனே உடன் சென்று உதவி செய்வது போல நடித்தது போலீஸாரையே அதிரவைத்துள்ளது.
தற்போது இந்த ‘கில்லர்’ தம்பதியைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறை அதிகாரியே இப்படி ஒரு பாதகச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
