பெங்களூருவில் போலி சாமியார் ஒருவரின் நூதன மோசடி அம்பலமாகியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான தட்சிணாமூர்த்தி என்ற நபர், “தனிப்பட்ட உறவுகளில் வசீகர சக்தியைப் பெற்றுத் தரும்” என்று பொய் கூறி, ஆன்லைனில் சட்டவிரோதமான பொருட்களை விற்று வந்துள்ளார். குறிப்பாக, உடும்புகளின் பிறப்புறுப்புகளை தலா ₹10,000-க்கு மந்திர சக்தி கொண்ட பொருள் என நம்பவைத்து விற்பனை செய்துள்ளார். வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) நடத்திய சோதனையில் இவர் பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உடும்பின் உறுப்புகள் மட்டுமன்றி, அரிய வகை பவளங்கள் மற்றும் வனவிலங்கு தொடர்பான பல பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி இந்த வர்த்தகத்தைச் செய்துள்ள இவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் இது போன்ற மூடநம்பிக்கை மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
