குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாபுபாய் ஜிராவாலா மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் ஆகிய தொழிலதிபர்கள் செய்துள்ள ஒரு நெகிழ்ச்சியான செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தமது தாயின் நினைவு நாளில் செய்யப்படும் உதவி, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்று கருதிய சகோதரர்கள், அமரேலியைச் சேர்ந்த 290 விவசாயிகளின் 30 ஆண்டுகாலப் பிரச்சனையை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்துள்ளனர். இந்த விவசாயிகள் கடந்த 1995ஆம் ஆண்டு தங்கள் நிலப் பத்திரங்களைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடகு வைத்திருந்தனர்.
சுமார் 30 ஆண்டுகளாக இந்தக் கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்ததால், அவர்களுக்குக் கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை. இந்த விஷயம் தொழிலதிபர்கள் பாபுபாய் மற்றும் கன்ஷியாம் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து, அவர்கள் அனைவரும் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையான ரூ.90 லட்சத்தைக் கூட்டுறவு வங்கியில் செலுத்தி, அவர்களின் நிலப் பத்திரங்களை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.
30 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரங்களைப் பெற்ற சில விவசாயிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். “ஏழைகளுக்கு உதவி செய்ய எங்கள் தாய் தூண்டினார். விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்குப் போதுமானது” என்று அந்தச் சகோதரர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
