இயற்கை அன்னை தனது படைப்பில் பல விந்தைகளை ஒளித்து வைத்துள்ளார். அந்த வகையில், பார்ப்பதற்கு அச்சு அசலாகப் பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு வினோதப் புழுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு என நம்பவைக்கும் தோற்றம் சமீபத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மரக்கிளை ஒன்றில் ஒரு சிறிய உயிரினம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதல் பார்வையில் அதன் தலை துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய பாம்பைப் போலவே அது காட்சியளிக்கிறது. அதன் உடல் அமைப்பு, நிறம் மற்றும் அசையும் விதம் என அனைத்தும் ஒரு பாம்பின் குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாகவே, இதைப் பார்ப்பவர்கள் இது பாம்பா அல்லது பூச்சியா என குழப்பமடைந்துள்ளனர்.

ஆனால் உண்மையில் இது பாம்பு அல்ல; இது ஒரு வகை ‘கேட்டர்பில்லர்’ (Caterpillar) எனப்படும் கம்பளிப்புழு ஆகும். இதனை ‘ஸ்நேக் மிக்ரி கேட்டர்பில்லர்’ (Snake Mimicry Caterpillar) என்று அழைக்கிறார்கள். வேட்டையாடும் பிற விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த உத்தியை இது பயன்படுத்துகிறது.

 

தனக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்தால், உடனே தனது உடலை உப்பச் செய்து, பாம்பின் தலை போன்ற வடிவத்தை எடுத்து எதிரிகளை அச்சுறுத்துகிறது.   ‘@AmazingSights’ என்ற எக்ஸ்  பகிரப்பட்ட இந்த 52 விநாடி வீடியோ, குறுகிய காலத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் இதனைப் பார்த்த இணையவாசிகள், “இயற்கையின் வடிவமைப்பு வியக்க வைக்கிறது”, “நிச்சயமாக அறிவியலால் மட்டுமே இதற்கான விளக்கத்தைக் கொடுக்க முடியும்” எனப் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், எதிரிகளை ஏமாற்ற இந்த உயிரினம் கையாளும் வித்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.