சமூக வலைதளங்களில் நாள்தோறும் விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு பூனையின் வீடியோ, இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பூனை குளக்கரை ஓரத்தில் அமர்ந்துள்ளது. அதன் வாயில் ஒரு ‘ஸ்ட்ரா’ (Straw) குழாய் இருக்கிறது. மனிதர்கள் குளிர்பானம் அருந்துவதைப் போல, அந்தப் பூனை ஸ்ட்ரா மூலம் குளத்தில் ஊதி குமிழ்களை (Bubbles) உண்டாக்குகிறது.

அடுத்த சில நொடிகளில், தண்ணீருக்கு அடியில் இருக்கும் மீன் ஒன்று அருகில் வந்தவுடன், மின்னல் வேகத்தில் அந்தப் பூனை தன் கால்களால் மீனைப் பிடித்துத் தூக்குகிறது. பூனையின் இந்த “தொழில்நுட்ப அறிவை” கண்டு நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by ExploreWorldShots (@viralshortspot)

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது உண்மையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. பெரும்பாலான பயனர்கள் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ எனத் தெரிவித்துள்ளனர். “இது நிச்சயம் ஏஐ-ன் கைவரிசை தான்” என்றும், “பூனைகள் இயல்பாக இப்படிச் செய்ய வாய்ப்பில்லை” என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், சிலரோ வேடிக்கையாக, “புலிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பூனைக்கு இவ்வளவு அறிவு இருப்பது ஆச்சரியமில்லை” எனவும், “என்னை விட இந்தப் பூனைக்கு அறிவு அதிகம்” எனவும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர்.

விலங்குகளின் இயல்பான நடத்தையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு கருவியைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது போல இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது ‘எடிட்’ செய்யப்பட்டதாக இருக்கலாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பூனையின் இந்த “ஸ்மார்ட்” செயல் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர். மேலும் தற்போது வரை ஆயிரக்கணக்கான லைக்குகளைக் குவித்து வரும் இந்த வீடியோ, இணையத்தில் ஒரு விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.