கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அரசு விரைவு பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவர், மாங்காவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்துமாறு நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சியுள்ளார்.
ஆனால், அங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி அவர்கள் பேருந்தை நிறுத்த மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த பெண், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த அவசரகால சுத்தியலை எடுத்து ஜன்னல் கண்ணாடியை திடீரென உடைத்து நொறுக்கினார்.
இந்த அதிரடி சம்பவத்தால் சக பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, “ஆத்திரத்தை கூட அடக்கலாம், ஆனால் இயற்கை உபாதையை (கழிவறை செல்ல வேண்டிய அவசரம்) அடக்க முடியாது” என்றும், தமக்கு ஏற்பட்ட கடுமையான அவசரம் காரணமாகவே வேறு வழியின்றி கண்ணாடியை உடைத்ததாகக் கூறி அந்தப் பெண் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இறுதியில், சேதமடைந்த பேருந்து கண்ணாடிக்கான நஷ்டஈடு தொகையான 28 ஆயிரம் ரூபாயை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்தியதை அடுத்து, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்; தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
