கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘துபாரே யானைகள் முகாமில்’ இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, எதிர்பாராதவிதமாக ஒரு யானை சரிந்து விழுந்து மிதித்ததில், சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜியுனேஷ் (33) என்ற பெண், தனது குடும்பத்தினருடன் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே வனவிலங்கு முகாமிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு காவிரி ஆற்றில் அரை டசனுக்கும் மேற்பட்ட யானைகளைக் குளிப்பாட்டும் காட்சியை அவர் கரையில் நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த ‘காஞ்சனா’ என்ற யானை திடீரென ‘மார்த்தாண்டா’ என்ற மற்றொரு யானையை ஓங்கித் தாக்கியது. இதனால் இரு யானைகளுக்கும் இடையே ஆற்றுக்குள் கடுமையான சண்டை மூண்டது. யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை அடுத்து, அங்கிருந்த மற்ற யானைகளும் மிரண்டு நாலாபுறமும் அலறியடித்து ஓடின. பாகன்கள் எவ்வளவு முயன்றும் யானைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

யானைகளுக்கு இடையே சண்டை நீடித்த நிலையில், நிலைதடுமாறிய மார்த்தாண்டா என்ற யானை ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்த ஜியுனேஷ் என்ற பெண்ணின் மீது சரிந்து விழுந்தது. விழுந்த யானை மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்தபோது, அதன் பிரம்மாண்ட காலடியில் சிக்கிய ஜியுனேஷ் நசுக்கப்பட்டார்.

அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த நெஞ்சை உலுக்கும் வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு சிறு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டே, யானையின் காலடியில் சிக்கிய பெண்ணை மீட்கத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜியுனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

 

இச்சம்பவத்திற்கு கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ஈஸ்வர் பி கந்த்ரே கடும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வனவிலங்கு முகாம்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அவர் பேசுகையில், “முகாம்களில் உள்ள யானைகளுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், விலங்குகளின் குணாதிசயங்களை நம்மால் எப்போதும் துல்லியமாகக் கணிக்க முடியாது. எனவே, இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் யானைகளின் தும்பிக்கையைத் தொட்டுப் பார்க்கவோ, மிக அருகில் நின்று புகைப்படம் (செல்ஃபி) எடுக்கவோ, அவற்றுக்கு உணவு மற்றும் குளியல் உதவிகள் செய்யவோ முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் எப்போதும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் இதேபோல மற்றொரு மாவட்டத்தில் 55 வயது நபர் ஒருவர் காட்டு யானை மிதித்துக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது சுற்றுலாத் தலத்தில் சென்னைப் பெண் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.