ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. கடந்த 2015-ம் வருடம் முதல் முதலாக இத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமில்லை என அறிவித்த மத்திய அரசானது மீண்டும் அத்திட்டத்தை கையில் எடுத்தது.

இதற்கான பணிகள் கடந்த 2021-ம் வருடம் முதல் முடுக்கிவிடப்பட்டது. 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு நினைத்த நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பணிகள் பாதியளவுக்கு கூட நிறைவேறவில்லை. முன்னதாக மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே காலவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. அந்த வகையில் 2024-ம் வருடம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.