மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டு, பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாகப் பதவி ஏற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் வெடித்துள்ளன.
இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட சோனர்பூர் பகுதி தொண்டரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது, ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும் சிலர் முட்டைகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவை வழங்கியுள்ளார். தனது ஆதரவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பானர்ஜி, பா.ஜனதா அரசின் அரசியல் வன்முறையையும், அரசு தூண்டிவிடும் பயங்கரவாதத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ குழுவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பயங்கரவாதத்திற்கு எதிராக நின்ற தனக்கு, இன்று தேசபக்த காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவை ஆதரித்தால் தேசபக்தர் என்றும், எதிர்த்தால் இலக்காக மாற்றப்பட்டு மௌனமாக்க முயல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், அதிகாரத்திற்கு முன்னால் தலைவணங்காமல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
