சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த மணி (47) என்பவர் தொழிலதிபர். சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அவரது தோழியான தீபிகா (24) என்பவரும் தங்கியிருந்தார்.
இருவரும் ஒரே அறையில் மது அருந்திய நிலையில், மது போதையில் தூங்கிவிட்ட மணிக்கு, காலை எழுந்ததும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தோழியான தீபிகா காணாமல் போனதோடு, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியும் திருடு போய் இருந்தது. உடனே அவர் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சபரிதாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் லொக்கேஷன் அடிப்படையில், தீபிகா தான் தங்க நகையை திருடி சென்றதாக தெரிய வந்தது. இதையடுத்து தீவிர வலைவீசிய போலீசார், தீபிகாவை குன்றத்தூரில் வைத்து நேற்று கைது செய்தனர். விசாரணையில், திருடிய 10 பவுன் தங்கச்சங்கிலியை தீபிகா ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், வாங்கிய நபர் அதை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றியுள்ளதாகவும் தெரியவந்தது. தற்போது அந்த தங்கக் கட்டியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தீபிகா திருமணம் ஆகாதவர். அவரது தந்தை சென்னை மாநகராட்சியில் ஊழியராக உள்ளார். பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக குன்றத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார். தீபிகாவுக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களை நம்ப வைத்து பழகி, பின்னர் நகை, பணம் போன்றவற்றை பறிக்கும் பழக்கம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிலதிபர் மணியிடமும் அதேபோன்று நடந்து கொண்டு, நகையை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை முடிந்ததும், தீபிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர்.
