கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த சஜூ ராஜ் என்பவர், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த பெமிலா (40) எனும் பெண் பணியாற்றி வந்தார். நிதி நிறுவன உரிமையாளர் பெமிலாவிடம் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில், பெமிலா லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், பெமிலா தனது ஆண் நண்பர் விஜின் என்பவருடன் இணைந்து நகைகளை திருடி, அவற்றை வேறு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.37,18,000 மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் கருங்கல் காவல் நிலையத்தில் பெமிலா, விஜின் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல் துறையினர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த இவர்களை தேடி வந்தனர்.

சுமார் நான்கு மாதங்களாக காரைக்காலில் ஒரு விடுதியில் பதுங்கியிருந்த பெமிலாவும், விஜினும் அண்மையில் கைது செய்து, கருங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.