மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வரும் நாட்களில் காண்டம்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக உடல்நலம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் காண்டம்கள், ராணுவ உத்திகளில் வீரர்களின் உயிரைக் காக்கும் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுவது பலரும் அறியாத உண்மை.
போர்க்களத்தில் காண்டம்களின் வியப்பூட்டும் பயன்பாடுகள் பற்றி தற்போது பாப்போம்.
அதாவது போர்க்களத்தில் வீரர்களின் உயிர்நாடி அவர்களது துப்பாக்கிகள். பாலைவன மணல் துகள்கள், தூசி அல்லது மழையினால் ஏற்படும் ஈரப்பதம் துப்பாக்கியின் குழாய்க்குள் சென்றால், அது துப்பாக்கியைச் செயலிழக்கச் செய்யும். இதனைத் தவிர்க்க, வீரர்கள் துப்பாக்கியின் நுனியில் காண்டம்களை மாட்டுகின்றனர். இது மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவசர காலத்தில் அதை அகற்றாமலேயே சுட முடியும்; இது இலக்கைத் தாக்குவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதன்பிறகு யுத்தத்தின் போது வரைபடங்கள் (Maps), பேட்டரிகள், தீப்பெட்டிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் நனையாமல் இருப்பது மிக அவசியம். கனமழை அல்லது ஆற்றைக் கடக்கும்போது இவை நனைந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். காண்டம்கள் நீப்புகாதவை மற்றும் இழுவைத்தன்மை கொண்டவை என்பதால், வீரர்கள் இத்தகைய அத்தியாவசியப் பொருட்களை காண்டம்களுக்குள் வைத்துப் பாதுகாக்கின்றனர்.
காண்டம்களின் பயன்பாடு நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது, இந்திய கடற்படை ஒரு தனித்துவமான உத்தியைக் கையாண்டது. கடலில் வெடிகுண்டுகளை நனையாமல் வைப்பதற்கு காண்டம்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வெடிகுண்டுகளின் ‘டைமிங் மெக்கானிசம்’ சரியாக வேலை செய்து, இந்திய கடற்படை வெற்றிகரமாக இலக்கைத் தகர்த்தது.
நேரடிப் போரின் போது மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, காண்டம்கள் அவசர காலக் கையுறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், காயங்களின் மேல் நீர் புகாதவாறு மூடுவதற்கு இது உதவுகிறது. இதன் மூலம் கிருமித்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மேலும் இவ்வாறு போர்க்களத்தில் வீரர்களின் உயிரைக் காக்கவும், ஆயுதங்களைப் பாதுகாக்கவும் இது ஒரு ‘மல்டி பர்பஸ்’ கருவியாகப் பயன்படுத்தப்படுவதால், போர் மூளும் சமயங்களில் காண்டம்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு விலையேற்றம் உண்டாகிறது.
