அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் ராணுவ மோதல்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா தனது ராணுவ இலக்குகளைப் பெருமளவில் எட்டிவிட்டதாகவும், இனி இந்தப் போரைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஈரானுடன் முறையான அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டாலும், அமெரிக்கா இந்தப் போரிலிருந்து வெளியேறும் என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். “இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிடுவோம். ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் நல்லது, இல்லையென்றாலும் வெளியேறுவதில் மாற்றமில்லை” என்று அவர் கூறினார்.
ஈரானின் தற்போதைய தலைமை குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். “ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதுதான் எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. இனி அவர்களால் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% நடைபெறும் மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) குறித்து ட்ரம்ப் ஒரு அதிரடி நிலைப்பாட்டை அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா இனி ஏற்காது. சீனா, பிரான்ஸ் மற்றும் அந்தப் பாதையைச் சார்ந்துள்ள பிற நாடுகள் முன்வந்து தங்கள் எண்ணெய் விநியோகத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது நட்பு நாடுகள் தங்கள் எண்ணெயை அவர்களே பாதுகாக்கும் நேரம் வந்துவிட்டது” என அவர் சாடினார்.
ஈரானின் தற்போதைய ராணுவ நிலை குறித்துப் பேசிய ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ராணுவ தளவாடங்களையும் முழுமையாக அழித்துவிட்டதாகக் கூறினார். “எங்கள் போர் விமானங்கள் எவ்விதத் தடையுமின்றி தெஹ்ரான் நகரின் மேல் வட்டமடிக்கின்றன. ஈரானிடம் திருப்பித் தாக்க எதுவுமில்லை. அவர்கள் தற்போது ஒப்பந்தத்திற்காகக் கெஞ்சும் நிலையில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஈரான் அச்சுறுத்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஈரானின் பெரும்பாலான தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், இனி அவர்களால் அமெரிக்க நிறுவனங்களுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுக்க முடியாது என்றும் கிண்டலாகத் தெரிவித்தார்.
