உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் வன்முறையாக மாறி, மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரின் முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம், எதிர்பாராத விதமாக முற்றியுள்ளது.

இந்த மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்ததில், அமர்தீப் சைனி, மனிஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய பிறந்தநாள் விழா, சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் மரணங்களால் ரத்தக் களறியாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தக் கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீரட் மண்டல டிஐஜி கலாநிதி நைதானி மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அற்பக் காரணத்திற்காக மூன்று உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.