விவசாயிகளின் நெல்மணிகள் வீணாவதைத் தடுக்க, தமிழக அரசு புதிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களை அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் ரூ. 332.46 கோடி மதிப்பீட்டில் ஏழு மாவட்டங்களில் (தஞ்சாவூர், நாகப்பட்டினம் உட்பட) 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், ஒரத்தநாட்டில் மட்டும் ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கிடங்கு அமைய உள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனிடம், தி.மு.க.வை விமர்சித்த நடிகர் விஜய் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழகத்திலேயே வெற்றி பெற முடியாத நடிகர் விஜய், புதுச்சேரியை வெல்வேன் என்று சொல்வது, ‘கூரையேறி கோழி பிடிக்காதவன் வானத்தில் வைகுண்டத்தைக் காட்டுவது போல’ இருக்கிறது. ஆசைக்கு அளவே இல்லை என்பதற்கு நடிகர் விஜய் ஓர் அடையாளம்” என்று கடுமையாக விமர்சித்தார்.
