சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர், ஆடி மாதத்தின் போது தனது மனைவியை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நமீதா என்ற இளம்பெண் மீது அவரது பார்வை திரும்பியுள்ளது. நாளடைவில் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கிய சுதர்சனுக்கு, நமீதாவை மிகவும் பிடித்துப் போய்விட்டதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, நமீதாவிடம் தனது காதலை வெளிப்படுத்திய சுதர்சன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அப்போது நமீதா உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை என்றாலும், சுதர்சன் பேசியதை தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர் தனது ஆண் நண்பருடன் சுதர்சனை சந்தித்த நமீதா, அந்த ஆடியோவை போட்டுக்காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சுதர்சன், நமீதாவின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஆனால், இத்துடன் விடாமல் சுதர்சனிடம் இருந்து பணம் பறிக்க நமீதா திட்டமிட்டுள்ளார். இந்தச் சதியில் அவரது தோழிகளான வழக்கறிஞர் மோனிஷா, கேரளாவைச் சேர்ந்த சிவரஞ்சனி மற்றும் சில ஆண் நண்பர்கள் இணைந்துள்ளனர். திட்டத்தின்படி, சுதர்சனை மிரட்டி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்த அந்த கும்பல், ஆடியோவை காட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. பணம் தர மறுத்தால் மனைவியிடம் காட்டிவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

சுதர்சன் சம்மதிக்காததால், அவரை கட்டிவைத்து பிளாஸ்டிக் பைப்பால் அடித்து, சிகரெட்டால் உடலில் சூடு வைத்து கோரமான சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளனர். சித்ரவதையை தாங்க முடியாமல் சுதர்சன் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகே அவர்கள் அவரை விடுவித்துள்ளனர்.

வீட்டுக்குத் திரும்பிய சுதர்சன், வேறு வழியின்றி நடந்த அனைத்து உண்மைகளையும் தனது மனைவியிடம் ஒப்புவித்துள்ளார். ஆரம்பத்தில் கோபப்பட்டாலும், கணவனின் பரிதாப நிலையைப் புரிந்துகொண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க பரிந்துரைத்துள்ளார்.

இதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி மற்றும் கூட்டாளிகள் உட்பட 5 பேரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆடி மாதத்தில் தனிமையை நினைத்த இளைஞருக்கு நேர்ந்த இந்தச் சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.