ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிஜி (PG) குடியிருப்பில் தங்கியிருந்த 29 வயது இளைஞர் ரோஹித் லால், பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை (Sex stimulants) அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், டெல்லியில் உள்ள இந்திய தரக் கட்டுப்பாட்டு மன்றத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று காலை ரோஹித் நீண்ட நேரமாகியும் அறைக்கதவைத் திறக்காததால், அவரது சக ஊழியர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரோஹித் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது அறையில் இருந்து பாலுணர்வைத் தூண்டும் மருந்து உறைகள் மற்றும் சில சுகாதார துணைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ரோஹித் தனது வருங்கால மனைவியைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகத் தயாரானபோது இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அளவுக்கதிகமான மருந்து உட்கொள்ளல் இதயத் துடிப்பை அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவரது உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆசைக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவு, ஒரு இளைஞனின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
