உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், புதிய காலணிகளை அணிவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கோரமான கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சௌமுகா நௌகா டோலா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் ஷர்மா என்ற சிறுவன், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட புதிய ஷூக்களை முதலில் யார் அணிவது என்பது குறித்து தனது தம்பி லட்சுமணன் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சூரஜ் அருகில் இருந்த கத்தரிக்கோலால் தனது தம்பியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த லட்சுமணன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். படுகாயமடைந்த லட்சுமணனை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரது நிலைமை மோசமடைந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குக்லி காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அற்பமான ஒரு காரணத்திற்காக அண்ணனே தம்பியைக் கொன்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.