தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவாக பேசியிருந்தார். அதாவது நடிகர் விஜயின் முதல் மாநாட்டுக்கும், திரைக்காட்சிக்கும் அனுமதி கொடுக்காமல் திமுக அலைகழிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பிறகு விஜயின் அரசியல் வருகையை பார்த்து திமுகவினர் பயப்படுவதாகவும் அதனால்தான் முதல் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் கூட்டணிக்கு அடித்தளம் போட்டு தான் தமிழிசை சௌந்தர்ராஜன் அப்படி பேசியதாக கூறப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக தான் அப்படி பேசினேன். புதிதாக ஒரு தம்பிக்கு கொடுத்த ஆதரவு என்பது கூட்டணிக்கான அழைப்பு கிடையாது என்று கூறினார். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய் தன்னுடைய புதிய தம்பி என்றும் அவரை வரவேற்பது மகிழ்ச்சி என்றும் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த நிலையில் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக காவல்துறையினர்  அனுமதி கேட்ட நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கி புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இன்னும் சில நாட்களில் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும் எனவும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.