புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண், தனது வருங்கால கணவரான கேதன் அகர்வாலை காதலன் சேதன் சௌதரியுடன் சேர்ந்து 400 அடி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவர்கள் எப்படி கொலை செய்தனர் என்பதைச் செய்து காட்ட வைத்ததில் பல திடுக்கிடும் ரகசியங்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கேதனை திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஷியா, அவரை கொலை செய்துவிட்டால் 3 ஆண்டுகள் கழித்து காதலனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என நம்பியதுடன்,சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஷாப்பிங் என்ற பெயரில் கேதனிடம் இருந்து 1 கோடி ரூபாயை வாங்கி காதலனின் தொழிலுக்காகக் கொடுத்துள்ளார்.

கொலை நடப்பதற்கு 34 நிமிடங்களுக்கு முன்பு காதலனுக்கு ரகசியமாக போன் செய்து மலை கோட்டையில் சுற்றுலா பயணிகள் இல்லாத இடத்தை ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஷியா, அருகில் நின்றால் கையைப் பிடித்து தப்பித்து விடுவார் என்ற எண்ணி தண்ணீர் குடிப்பது போல் தரையில் அமர, கேதன் தள்ளி நின்ற சமயம் பார்த்து பின்புறமாக வந்த காதலன் அவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்றுள்ளான்.

வெளியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரியில் ஜோடியாக அலாதி பாசம் காட்டிவிட்டு, பின்னணியில் இந்த கொலை சதித்திட்டத்தை அரங்கேற்றிய ஜோடியின் பகீர் வாக்குமூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.