சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்வீடன் நாட்டின் ‘V-Dem’ ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஜனநாயகத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தின்போது இருந்த அதே நிலைக்கு தற்போதைய இந்திய ஜனநாயகம் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடைமுறைகள், நீதித்துறையின் சுதந்திரம், ஊடகங்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் உலக நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஜனநாயகம் நிலவும் 179 நாடுகளில் இந்தியா 106-வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பன்மைத்துவத்திற்கு எதிரான இந்து தேசியவாதக் கொள்கைகளே இந்தியாவின் இந்தச் சீரழிவுக்கு முக்கியக் காரணம் என்று விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு கடுமையாகச் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன் விளைவாகத் தற்போதைய தேர்தல் அமைப்பு ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்கும் அரசியல் ஆயுதங்களாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கும்பலால் கடுமையான அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்ததை வன்னி அரசு நினைவுபடுத்தியுள்ளார்.

“>

 

நவீன இந்தியாவை சர்வாதிகார நாமாக மாற்றும் பாசிச நடவடிக்கைகளுக்கு மக்கள் மற்றும் மாணவர் சக்தியின் மூலம் தக்க பாடம் புகட்டப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்தின் மீதான இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்கள் தேசிய அரசியலில் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளன.