மும்பை மின்சார ரயிலில் இருக்கைக்காகத் தொடங்கிய ஒரு சாதாரணத் தகராறு, திடீரென மொழிப் போராக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்திய வழித்தடத்தில் (Central Line) சென்று கொண்டிருந்த ஒரு நெரிசலான பெண்கள் பெட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஆறு முதல் ஏழு பெண்கள் இருக்கைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண் திடீரென மற்றொரு பெண்ணை நோக்கி, மராத்தி பேசத் தெரியாததைக் கண்டித்து ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினார்.

​”எங்கள் மும்பையில் இருக்க வேண்டுமானால் மராத்தி பேசுங்கள், இல்லையென்றால் வெளியேறுங்கள்” என்று அவர் மற்ற பயணிகளை நோக்கிச் சத்தமிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மும்பை ரயில்களில் இருக்கைக்காகப் போட்டி நடப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அது இப்படி ஒரு மொழிப் பிரச்சனையாக உருவெடுத்தது அங்கிருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் மும்பையின் கலாச்சாரம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்துப் பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.